யுத்தம் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் இலங்கைக்கு திரும்ப வாய்ப்பு : அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட மாஅதிபரின் பரிந்துரை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி, அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ள நிலையில், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தாயகம் திரும்பும் இலங்கையர்களை எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், நாடு திரும்புவோர், போர்க்காலச் சூழலில் நாட்டிலிருந்து சென்று, தாம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் வசித்தமைக்கான சான்றுப்பத்திரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது.
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள்
அத்துடன் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், வானூர்தி நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான UNHCR உம் ஆட்சேபித்திருந்தது.
இந்த பின்னணியிலேயே, குடிவரவு, குடியகல்வு சட்டத்திலுள்ள நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |