அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொலை செய்ய ஆயுதங்களுடன் திரிந்தவர் கைது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பைக் கொலை செய்யும் நோக்கத்துடன், வெள்ளை மாளிகை அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க தலைநகர் வோஷிங்டனில் கடந்த 5ம் திகதி நள்ளிரவு வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், காரை நெருங்கி அதில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
ட்ரம்பைக் கொல்லுமாறு மனதில் கேட்ட குரல்கள்
இதன்போது"வோஷிங்டன் டி.சி.-க்குச் சென்று ஜனாதிபதி ட்ரம்பைக் கொல்லுமாறு தனது மனதில் குரல்கள் கேட்டதாக அவர் கூறினார்" என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அவரது பெயர் ரோனி யோர்டிரிக்ஸ் குவானிபா சிரினோஸ், 26, என்பதும், வெனிசுலா நாட்டைச் சேர்ந்த அவர் 2024ல் டெக்சாஸ் வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதும் தெரியவந்தது.
திருடப்பட்ட காரில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள்
அவர் ஓட்டி வந்தது ஏற்கனவே திருடப்பட்ட கார் என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அதிலிருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் டசின் கணக்கில் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

ரோனி யோர்டிரிக்ஸ் மீது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |