இராணுவ வசமுள்ள யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை காணி - சபையில் எம்பி கோரிக்கை
யாழ்ப்பாணம் - பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி தற்போதும் இராணுவ வசமே உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
எனவே, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணியை அரசு உடனடியாக விடுவித்து, அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'கல்வியியற் கல்லூரிகளைப் பல்கலைக்கழகப் பீடங்களாக மாற்றுவதற்கான' தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்வி மற்றும் அடிப்படை வசதி
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:- "மலையகத்தில் அமைந்துள்ள கொட்டகலை கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி என்பன மலையகத்தில் வாழும் 9 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்காகப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட பீடங்களாக மாற்றப்படும்போது, அது அப்பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவுசெய்யக் கூடியதாக அமையும்.

அதேபோன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையானது ஒரு தனித்துவமான கல்விப் பீடமாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும்போதுதான் முகாமைத்துவத் துறையிலுள்ள அதிபர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சித் தேவைகள் வளர்ச்சியடைய முடியும்.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகபூர்வத் தகவல்களின்படி, வரலாற்றுப் பெருமைமிக்க பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் நிலப்பரப்பு இப்போதும் இராணுவத்தின் வசமே காணப்படுகின்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசாலை
கல்வித்துறையை இராணுவப் பொறிமுறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால், இந்த நாட்டின் கல்வித்துறை எந்தளவுக்கு முடங்கியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.

பலநூற்றுக்கணக்கான சிறந்த ஆசிரியர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை இப்போதும் இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது.
வட பகுதி மக்களின் காணிகளை விடுவிப்போம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, உடனடியாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணிகளையும் விடுவித்து, அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான பீடமாக மாற்றியமைக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |