மடியில் கனமில்லை என்றால் விசாரணைக்கு தயங்குவது ஏன் - கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி
விசாரணைக்கு அஞ்சும் தலைவர்கள்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பங்குபற்றியமை வெளிப்படும் என்பதாலேயே நாட்டின் தலைவர்கள் அந்த சம்பவத்தை விசாரிக்க விரும்பவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இங்கு ஏதாவது இரகசியம் இருக்க வேண்டும் என்றும், தலைவர்கள் நேர்மையாகவும், தலையீடு இல்லாதவர்களாகவும் இருந்தால், விசாரணைக்கு பயப்பட வேண்டாம் என்றும் கொழும்பு பேராயர் தெரிவித்தார்.
ராகம தெவத்த பசிலிக்கா தேவாலயத்தில் இன்று (21) இடம்பெற்ற ஆசீர்வாத ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 40 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
75 வருடங்களாக தலை விரித்தாடும் சுயநலமும் பாவமும்
ஆணாதிக்க ஆசைகளால் வாழ்க்கை இருள் சூழ்ந்து விடுகிறது என்று கூறிய கொழும்பு பேராயர், வெற்றி என்பது செல்வத்தையும் அதிகாரத்தையும் வெல்வது அல்ல என்றும் கூறினார்.
நாட்டில் 75 வருடங்களாக சுயநலமும் பாவமும் தலைவிரித்தாடுவது அண்மைக்கால துரதிஷ்டவசமான நிகழ்வுகளின் மூலம் தெரியவருவதாகவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.