உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் நிரபராதிகள் கொலை செய்யப்பட்டது ஏன்? மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் நிரபராதிகளான மக்களை கொலை செய்தமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ( Cardinal Melkum Ranjith Antakai) தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Melkum Ranjith Antakai) இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நிரபராதிகளான மக்களை கொலை செய்தமைக்கான காரணத்தை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது எமக்கு வழங்கும் பரிசல்ல. இதனை தெரிந்துகொள்ள வேண்டியது எமது உரிமை என்பதை நாஙக்ள மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.
இதனால், தயவு செய்து ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையான கதையை வெளியிடுங்கள் என்றே நாம் மீண்டும், மீண்டும் நாட்டின் தலைவர்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இது நாட்டின் தலைவர்களுடன் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளும் போராட்டம் அல்ல என்பதையே நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம். நீதி நிலைநாட்டப்படுவதை காண வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
அதிகளவில் பணத்தை மற்றும் அழிந்தவற்றை நிர்மாணித்து தருமாறு நாங்கள் கோரவில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தேவை என வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.