காட்டு யானைகளின் அட்டூழியம்..! பயிர்ச்செய்கைகள் நாசம்
வவுனியா குடாகச்சக்கொடியவில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காட்டு யானைகள் கிராமங்களில் பயிர்ச்செய்கை மட்டுமல்ல மக்களையும் தாக்க ஆரம்பித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த கிராமத்தில் விவசாயிகளின் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் உள்ளிட்ட பல பயிர்களை காட்டு யானைகள் நேற்று இரவு துவம்சம் செய்துள்ளன.
இரவு நேரங்களில் கிராமத்திற்குள் புகும் காட்டு யானை கடந்த வாரம் ஒருவரை தாக்கியதில் முதுகில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதுடன், குறித்த நபர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளிடம் கோரிக்கை
இக்கிராமங்களை சுற்றி யானை வேலி அமைத்து தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை தீர்வை வழங்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், இம்முறை பயிர்கள் விளைய ஆரம்பித்துள்ள நிலையில் காட்டு யானைகளினால் சேதங்கள் அதிகரித்துள்ளதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.