தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவர் - அமைச்சர் சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி யார் செயற்பட்டாலும் தகுதி தராதரம் பாராது அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவிற்கு அமைய இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், மாறாக இந்த கைதுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நேற்றைய தினம் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்ற நிலையில், அதனை கொண்டாடும் வகையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது ஏன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை.
நாடாளுமன்றம் இன்று காலை கூடிய வேளையில், பொது மக்கள் முறைப்பாட்டு நேரத்தில் எதிர்த்தரப்பின் பல்வேறு உறுப்பினர்களும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
குறிப்பாக ஸ்ரீலங்கா காவல்துறை சட்டத்தை மீறி, தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை கைது செய்துள்ளதோடு, நீதிமன்றில் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் கைதானவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
இதன்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சட்ட ரீதியாகவே அனைத்து விடயங்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.
ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் நான் சில விடயங்களை தெரிவிக்க விரும்புகின்றேன். சட்டத்தை மீறுவது யாராக இருந்தாலும், தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை செய்ய வேண்டாமென அரசியல்வாதிகள் அல்ல, சுகாதார சேவைகள் பணிப்பாளரே தடை விதிக்கின்றார். இது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கு அவரே பணிப்ரை விடுத்துள்ளார். தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே காவல்துறை அதனை நடைமுறைப்படுத்தியது அவ்வளவுதான். இங்கு தகுதி தராதரங்கள் பார்க்கப்படவில்லை. ஆகவே எதிர்காலத்திலும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுமாயின் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, ஒன்றுகூடும் உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் யாரையும் தனிமைப்படுத்தலுக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, பசில் ராஜபக்ச பதவியேற்ற நிலையில், அதனை கொண்டாடும் வகையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது ஏன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். “நீங்கள் குறிப்பிடும் தனிமைப்படுத்தல் சட்டம், பதவியேற்பின் பின்னர் இடம்பெறுகின்ற வரவேற்பு நிகழ்வுகளுக்கு இல்லையா? பதவியேற்பின் பின்னர் கடமைகளை பொறுப்பேற்கையில் தனிமைப்படுத்தல் சட்டம் இல்லையா? அதனை செய்ய முடியுமா? நீங்கள் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து, தவறை நிறுத்திக்கொள்ளுங்கள்.” என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
எனினும் இந்த கேள்விக்கு ஸ்ரீலங்கா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதிலளிக்கவில்லை.