போரில் தாயை பறிகொடுத்த உக்ரைன் சிறுமியின் மனதை உருக வைக்கும் கடிதம் (photos)
உக்ரைனை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி போரில் உயிரிழந்த தனது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகிவருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்ய இராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இதுவரை நாற்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் போரில் உயிரிழந்த தனது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த கடிதத்தை உக்ரைன் உள் விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகர் அன்டன் கிராசென்கோ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சிறுமி அந்த கடிதத்தில், அம்மா, இந்த கடிதத்தை மார்ச் 8ஆம் திகதி உனக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன். எனக்கு ஒன்பது வருடங்கள் சிறந்த வாழ்நாள்களை தந்த உனக்கு நன்றி. எனது குழந்தைப் பருவத்தை சிறப்பாக்கிய உனக்கு நான் நன்றிக்கடன் பெற்றுள்ளேன்.
உலகின் தலைசிறந்த தாய் நீ தான். உன்னை நான் மறக்கவே மாட்டேன். வானத்தில் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சொர்க்கத்திற்கு நீ செல்ல வேண்டும். நாம் சொர்க்கத்தில் சந்திப்போம்.
நல்ல பெண்ணாக இருந்து சொர்க்கத்திற்கு வர நான் முயற்சிக்கிறேன். அன்பு முத்தங்களுடன், கலியா என அச்சிறுமி தனது கைப்பட உருக்கமாக கடிதத்தை எழுதியுள்ளார்.
இந்த சிறுமியின் தாயார் போரோட்யன்கா என்ற பகுதியில் ரஷ்ய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.


