மோசமான விளைவை ஏற்படுத்தும் - அரசுக்கு சம்பிக்க கடும் எச்சரிக்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் அதிபர் ரணிலுக்கு இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் இரண்டுக்கு இரண்டு என்ற அடிப்படையில் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்தாமல் இருக்க முயற்சித்தமைக்கான காரணம்
தேர்தல் நடக்குமா? இல்லையா? தேர்தல்கள் ஆணைக்குழு நேரடியாக முடிவெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென ரணவக்க சுட்டிக்காட்டினார்.
தேர்தலை நடத்தாமல் இருக்க முயற்சித்தமைக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளதாகவும், அது வேறு ஒன்றும் இல்லை எனவும், கொழும்பு மாவட்டத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படி சிறி லங்கா பொதுஜன பெரமுன வெறும் 25,000 வாக்குகளை மட்டுமே பெறும் என தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோசமான விளைவை ஏற்படுத்தும்
ஆனால் ஜனநாயகத்தை மதித்து ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தேர்தலை நடத்தாமல் இருப்பதன் மூலம் எதிர்கால தேர்தல்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும் எனவும் எம்.பி மேலும் தெரிவித்தார்.
