காவற்துறை ஆணைக்குழுவை நாடவுள்ள விமல் வீரவன்ச!
தான் வழங்கிய வாக்குமூலம் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டமை தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று (11.10.2025) காலை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“புவக்தண்டாவே சனா“
புவக்தண்டாவே சனா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் பற்றி ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நேற்று முன்தினம் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
புவக்தண்டாவே சனா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி, முன்னாள் அமைச்சர் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பாக காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
எவ்வாறாயினும், குறித்த அறிக்கையில் தான் வழங்கிய வாக்குமூலம் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாக விமல் வீரவன்ச நேற்றைய தினம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[XEOYV0J ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
