மீண்டும் தம்பக்கம் இழுக்கும் மகிந்தவின் தீவிர முயற்சிக்கு விமல் பதிலடி!
நாங்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. அதுதான் முக்கியம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஒருபோதும் நாம் மகிந்த ராஜபக்சவின் பக்கம் மீண்டும் செல்லமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மகிந்தவின் பக்கம் மீண்டும் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரை சேர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே விமல் வீரவன்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஓரிடத்தில் பேசுகின்றார் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்று. இன்னோர் இடத்தில் பேசுகின்றார் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் போகக்கூடாது என்று.
கொள்கையே முக்கியம்
அவர்கள் ஓரிடத்தில் இருந்தாலும் கொள்கையில் நிலையாக இல்லை. நாங்கள் இடம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. ஆகவே கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல.
அது மட்டுமன்றி, நாட்டை நாசமாக்கிய மஹிந்த தலைமையிலான அணியுடன் ஒருபோதும் இணையமாட்டோம். இது எமக்கு சாதகமான கொள்கை அல்ல. இதனால் எதிரிகள் அதிகம் வளருவார்கள். எதிர்ப்புகள் கூடும். எமக்கு எதிரான தாக்குதல்கள் கூடும்.
உயிர் ஆபத்து
உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. எது எவ்வாறாயினும், மஹிந்த தலைமையிலான அணியுடன் இணையமாட்டோம், அது ஒருபோதும் நடக்காது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
