வீட்டில் செய்வினை அகற்றும் பூஜை - பெண் பூசாரி செய்த செயல் - தமிழர் பகுதியில் சம்பவம்!
வீடொன்றில் செய்வினை இருப்பதாகவும், அதனை அகற்றித் தருவதாகக் கூறி பூஜை தட்டில் வைக்கப்பட்ட பணமும் தங்க மோதிரமும் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில், பூஜையை மேற்கொண்ட கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் பூசாரி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்வினை அகற்றும் பூஜை
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பூசாரி மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடொன்றுக்கு சென்று, அவ்வீட்டில் செய்வினை இருப்பதாகவும், அதனை தனது பூஜையின் மூலம் எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.
குறித்த பூஜைக்கு வீட்டில் உள்ளவர்கள் உடன்பட்ட நிலையில், பூஜை நடந்துள்ளது.
பூஜையில் பெண் பூசாரியின் வேண்டுகோளுக்கு அமைய 60 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தங்க மோதிரம் என்பன வைக்கப்பட்டுள்ளது.
தட்டில் வைக்கப்பட்ட பணம் மற்றும் மோதிரம் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டு அறை ஒன்றில் பூஜை நடத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர், பெண் பூசாரி அந்த அறை கதவை மூடிவிட்டு கதவை 10 நாட்களுக்கு திறக்கக் கூடாது எனக் கூறி, தான் 10 நாட்களின் பின்னர் வந்து கதவை திறந்து பணம் மற்றும் மோதிரத்தை எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளார்.
பணம், நகை திருட்டு
10 நாட்களின் பின்னர் வீட்டில் இருந்தவர்கள் பூசாரிக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது அவரது தொலைபேசி எண் இயங்கவில்லை, இதனால் அறையை திறந்து உள்ளே இருந்த துணியைத் திறந்து பார்த்தபோது பணம் மற்றும் நகை என்பவற்றை பூசாரி திருடிச்சென்றமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து, குறித்த பெண் பூசாரி மட்டக்களப்பு நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளர்.
இதேவேளை, குறித்த பெண் பூசாரி பல வீடுகளில் செய்வினை இருப்பதாகவும் அதனை எடுத்து தருவதாக தெரிவித்து பணம் தங்க ஆபரணங்களை திருடிய பல வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

