விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாட முயன்ற பெண் கைது
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாகரன் என குறிப்பிட்ட பிறந்தநாள் கேக்கை கொண்டு சென்றதாக கூறப்படும் 43 வயதுடைய பெண் ஒருவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிடம் பிறந்தநாள் கேக்கிற்கு மேலதிகமாக மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல பொருட்களும் காணப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாகரை துயிலுமில்லத்திற்கு அருகில்
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருடன் போரிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் புதைக்கப்பட்ட வாகரை முன்மாரி மயானத்திற்கு அருகில் உள்ள வீதியில் காவல்துறை குழுவொன்று கடமையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது அவ்வழியாக கேக்குடன் சென்ற பெண்ணிடம் நடத்திய விசாரணையின்போது, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மயானத்திற்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றதாக தெரியவந்ததாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு
பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு வேறு நபர்கள் மயானத்திற்கு வரவிருந்ததாகவும், ஆனால் பிறந்தநாள் கேக் மற்றும் பிற பொருட்களுடன் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதையடுத்து அதைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண் வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |