வெளிநாடு அனுப்புவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண்! அம்பலமான அதிச்சிகர பின்னணி
தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சந்தேகநபரான பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏமாற்றப்பட்ட பேருந்து உரிமையாளர்
அனுராதபுரம் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த இவர், ரத்மலான விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறி பேருந்து உரிமையாளர் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.

பிலியந்தலையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் தனது பேருந்தை விற்று 6 மில்லியன் ரூபாய் வழங்கியது உட்பட, பல தடவைகளில் மொத்தம் 13.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்தப் பெண்ணிடம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொள்ள போலி விமானப்படை சீருடையில் வந்த அப்பெண், பின்னர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பேருந்து உரிமையாளர் கடந்த மே மாதம் காவல்துறையில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
15 காவல்நிலையங்களில் முறைப்பாடுகள்
அதன்படி, குருநாகல் பகுதியில் வைத்து அந்தப் பெண்ணும் அவரது கணவர் எனக் கூறிக்கொண்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி இவர் 2.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொல்லுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட 15 காவல் நிலையங்களில் இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பண மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |