சட்டவிரோதமாக வங்கி கணக்குகள் பராமரிப்பு...! சிக்கிய பெண் - விசாரணை முன்னெடுப்பு
சட்டவிரோதமாக நான்கு வங்கிக் கணக்குகள் பராமரித்த குற்றசாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் ஏழு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வங்கிக் கணக்குகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைப் பிரிவினர்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரியால் பராமரிக்கப்பட்டு வந்த நான்கு வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலியந்தலை பகுதியில் அமைந்துள்ள இரண்டு தனியார் வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த கணக்குகள் ஊடாக 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்
அத்தோடு போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் குறித்த கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வந்த 49 வயதுடைய பெண், நேற்று (05-11-2026) விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடபாத்த பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை இன்று (06-11-2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |