இன்று முதல் போலந்திலிருந்து இலங்கைக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பயணிகள் விமான சேவை
ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், போலந்திலிருந்து இலங்கைக்கான குளிர்கால சுற்றுலா விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, போலந்தின் மூன்று முக்கிய நகரங்களிலிருந்து என்டர் எயார் (Enter Air) விமான சேவைக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் தமது முதலாவது பயணத்தை ஆரம்பித்து, 550 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (06) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
இதன்படி, இன்று காலை 6.51 மணிக்கு போலந்தின் கட்டோவிஸ் (Katowice) நகரிலிருந்து ENT-7607 என்ற விமானமும், காலை 7.40 மணிக்கு போஸ்னான் (Poznań) நகரிலிருந்து ENT-1913 என்ற விமானமும், காலை 9.40 மணிக்கு வார்சோ (Warsaw) நகரிலிருந்து ENT-1561 என்ற விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
சுற்றுலாப் பயணிகள்
இந்த விமானப் பயணங்களுக்காக என்டர் எயார் நிறுவனம் தனது விமானக் குழுமத்திலுள்ள போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி வரை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை குறித்த மூன்று நகரங்களிலிருந்தும் விமானங்கள் இலங்கைக்கு இயக்கப்படவுள்ளன.
இதற்காக மொத்தமாக 42 விமானப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் ஊடாக போலந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இதேவேளை, போலந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்தக் குளிர்கால சுற்றுலா விமான சேவைகள் கடந்த 15 வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்