இறக்குமதி விலையில் எரிபொருளை வழங்க முடியாது: காற்றில் பறந்தது அநுரவின் தேர்தல் வாக்குறுதி
சர்வதேச சந்தையிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விலைக்கே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்த போதிலும், நடைமுறையில் விநியோக மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இருப்பதால் அவ்வாறு வழங்க முடியாது எனப் பொருளாதார நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் ஊடகங்களில் வெளியான விவாதங்களின்படி, அரசாங்கத்தின் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகள் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாகியுள்ளன.
தேர்தல் மேடைகளில் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, துறைமுக இறக்குமதி விலையை அடிப்படையாகக் கொண்டே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
சாத்தியமற்ற ஒன்று
எனினும், ஒரு நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும்போது அதன் போக்குவரத்துச் செலவுகள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான தரகுப் பணம் மற்றும் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் போன்ற கூடுதல் செலவினங்கள் காணப்படுவதால், துறைமுக விலைக்கு எரிபொருளை நுகர்வோருக்கு வழங்குவது உலக சந்தையில் எந்தவொரு நாட்டிலும் சாத்தியமற்ற ஒன்று.

தற்போது சந்தையில் நிலவும் விலை குறித்து விமரிசித்துள்ள ஆய்வாளர்கள், "வெரிட்டே ரிசர்ச்" நிறுவனம் கணக்கிட்டுள்ள தேசிய எரிபொருள் விலை சூத்திரத்தை விடக் குறைந்த விலையிலேயே அரசாங்கம் தற்போது எரிபொருளை வழங்கி வருவதாகக் கூறப்படும் தகவல்களையும் மறுத்துள்ளனர்.
அரசாங்கம் மானியம் வழங்கி எரிபொருள் விலையைக் செயற்கையாகக் கட்டுப்படுத்த முயல்வது, நாட்டின் தடையற்ற சந்தைப் பொருளாதார முறைமைக்குப் பாதகமாக அமையும் என்றும், இது தேர்தலை இலக்கு வைத்த ஒரு தந்திரோபாய அரசியல் நகர்வு மட்டுமே என்றும் விமரிசிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தைப் பிடிப்பதற்காகத் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி விட்டு, தற்போது செயல்பாட்டுச் செலவுகளைக் காரணம் காட்டி விலையைக் குறைக்கத் தவறியுள்ள அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலப்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிருப்தி எழுந்துள்ளது.
நட்டத்தில் அல்லது மானியத்தில் எரிபொருள்
அரசாங்கம் நட்டத்தில் அல்லது மானியத்தில் எரிபொருளை வழங்குவதாகக் கூறினாலும், உண்மையில் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் 150 ரூபாயும், டீசலுக்கு 67 ரூபாயும் பல்வேறு வரிகள் மூலமாக அரசாங்கமே மக்களிடமிருந்து அறவிடுகிறது எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறன்றன.

இந்நிலையில் அரசாங்கம் உண்மையில் எரிபொருளுக்கு மானியம் வழங்குகிறது என்றால், அதன் உண்மையான இறக்குமதி விலை, செயல்பாட்டுச் செலவுகள், தரகுகள் மற்றும் வரிகள் அடங்கிய முழுமையான விலைச் சூத்திரத்தின் விபரங்களை உடனடியாக பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் சவால் விடுத்துள்ளன.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் போதும் இலங்கையில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படுவது, அரசாங்கத்தின் முறையற்ற நிதி மேலாண்மையையும் அதன் சுமையை மக்கள் மீது சுமத்துவதையுமே காட்டுகிறது.
மற்றொரு புறம், மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், கப்பல் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டணங்கள் மற்றும் உலகளாவிய எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் கடந்த ஆண்டை விட சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரப்பு விளக்குகிறது.
இந்த உலகளாவிய விலை அதிகரிப்பினால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக, அரசாங்கம் சுமார் 57 பில்லியன் ரூபாயை எரிபொருள் மானியமாக ஒதுக்கி, விலையுயர்வுச் சுமையின் ஒரு பகுதியை எண்ணெய் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு கட்டுப்படுத்தி வருவதாகவும் அரசாங்கத் தரப்பு நியாயப்படுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ராஜபக்சர்களின் உளவாளி என்ற எதிர்வினை: தமிழர்கள் கற்க வேண்டிய இஸ்ரேலின் வியூகங்கள் - நிராஜ் டேவிட் வெளிப்படை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்