மடு மாதாவை தரிசிக்கவந்தவேளை அதிகாலை நிகழ்ந்த அனர்த்தம்
மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கி பயணித்த நிலையில், மடு தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பு, வீதியை விட்டு விலகி மரத்தில் கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மடு காவல்துறையினர் மேலதிக விசாரணை
உயிரிழந்த சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ ( வயது - 55) என்ற பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மடு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |