வேலன் சுவாமியிடம் அத்துமீறிய காவல்துறை.... பௌத்த துறவிகளிடம் அடிபணியும் அரசு
இலங்கையிலே அரசாங்கம் பௌத்த பேரினவாதத்தை அனுசரித்து செல்ல வேண்டியவர்களாகத்தான் எப்போதும் இருக்கின்றார்கள் என்பதற்கான உண்மைகள் அண்மைய நாட்களிலே வெளிவரத் தொடங்கி இருப்பதாக வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
பௌத்த துறவிகளுடைய போராட்டத்திலே அரசாங்கம் எடுக்கப் போகின்ற முடிவு பௌத்த பேரினவாதத்திற்குள் கட்டுண்டுதான் இந்த நாட்டிலே அரசாங்கம் பயணிக்க முடியும் என்ற ஒரு விடயம் துலாம்பரமாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் நான், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டோம். சமயம் சார்ந்த ஒருவரான வேலன் சுவாமி அவர்கள் கைது செய்யப்படும்போது அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துதான் கைது செய்கின்றார்கள்.
நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் அளிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டை முன்வைத்து அதன் பின்னர்தான் நீதிமன்றத்திலே காவல்துறையினர் முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பத்திலே வேலன் சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டபோது அவருடைய ஆடை இழுக்கப்பட்டது, நான் கண்களால் கண்ட சாட்சியாக இருக்கின்றேன்.
எங்களை கைது செய்து அதாவது காவல்துறையினர் தாங்கள் ஒரு தடுப்பு போட்டு வைத்திருந்த வலயத்துக்குள் கொண்டு சென்ற பிறகு அவருடைய கழுத்திலே செப்பு கம்பியிலே மாட்டப்பட்டிருந்த உருத்திராட்ச மாலை இழுத்து அறுக்கப்பட்டது.
அதிலே கழுத்திலே காயம் ஏற்பட்டது. அவர் வைத்தியசாலையிலே அது தொடர்பாக சிகிச்சை பெற்றிருக்கின்ற ஆதாரங்களும் இருக்கின்றது.
அதன் பின்னர் அவர் அந்த உருத்திராட்ச மாலை கொட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார். நிலத்திலே விழுந்தவற்றை காவல்துறையினரின் சப்பாத்து கால்களுக்கு இடையிலே சிந்தி கிடந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தார்.
அதிலே பலது சிதறிவிட்டது. கிடைத்தவற்றை தன்னுடைய காவி உடையினுடைய பொக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு, அங்கே காவல்துறையினருடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கே கொண்டு வந்து இறக்கப்பட்டார்.
அப்போது எங்களிடம் இருந்த உடைமைகள் பறிக்கப்பட்டன. அவரும் தொலைபேசி எல்லாவற்றையும் வழங்கிவிட்டு, இந்த உருத்திராட்ச மாலை என்பது ஒரு புலால் உண்கின்ற ஒருவரால் தொடப்பட முடியாதது. இதனை தயவு செய்து என்னிடத்திலே இருப்பிலே விட்டுவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் கெஞ்சி மன்றாடினார் .
ஆனால் அவர்கள் அதை அனுமதிக்கவில்லை. ஆகவே அந்த உருத்திராட்ச மாலை என்பது ஒரு அவர் தீட்சை பெற்றதன் பின்பதாக குருத்துவ நிலையை அடைந்த நிலைமையிலே இடப்படுகின்ற ஒரு அடையாளம்.
ஆனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது தொடர்பிலே நாங்கள் எவ்வளவு தூரம் பேசினோம், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம், சில சமய அமைப்புகள் கண்டித்தன.
ஆனால் ஜனாதிபதி வாய் திறக்கவில்லை இன்று பௌத்த நிலைமைகள் என்று வரும்போது ஜனாதிபதியினுடைய பிரதானி அங்கே செல்கின்றார், அதுபோன்று பிரதமர் கருத்து தெரிவிக்கின்றார், அரசாங்கம் ஆடிப்போயிருக்கின்றது, பௌத்த துறவிகளில் அரசாங்கம் கை வைக்க கூடாது என்று எதிர்க்கட்சிதலைவரும் சொல்லுகின்றார்.
ஆகவே இவை அனைத்துமே ஒன்றை வெளிப்படுத்துகின்றன.அதாவது இந்த நாட்டிலே பௌத்த பேரினவாதத்துக்கு அப்பால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் அதற்கு சற்றேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றவாறு தமிழ் மக்களுடைய உரிமைகள் ஒருபோதும் நிலைநாட்டப்படாது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |