காதலியை தேடி இலங்கை வந்த இந்திய பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருமணம் செய்து கொள்ள விருப்பம்
இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்தி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் திருமணம் செய்து கொள்ள இரு பெண்கள் விருப்பம் தெரிவித்ததையடுத்து ஒரு பெண்ணின் தந்தை காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே மனநல பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் சமூக ஊடகங்களின் ஊடாக இரண்டு வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த குறித்த பெண் 24 வயதானவர் எனவும், இலங்கையை சேர்ந்த பெண் 33 வயதானவர் எனவும் ஒரு பிள்ளையின் தாயுமாவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவருக்கும் இருந்துள்ள தொடர்பு காதலாக உருவாக்கியதை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் இந்திய பெண், தனது காதலியை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இருந்த போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பணி சுமை காரணமாக இலங்கை பெண்ணால் உடனடியாக கடவுச்சீட்டை பெற முடியவில்லை.
இலங்கை வந்த இந்திய பெண்
இதனால், இந்திய பெண் சுற்றுலா விசாவில் கடந்த 20 ஆம் திகதி இலங்கை வந்து, அக்கரைப்பற்றுக்கு சென்று இலங்கை பெண்ணினுடன் இரவு தங்கி இருந்துள்ளார்.
இந்த பெண்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தொடர்பை எதிர்த்துள்ள பெண்ணின் தந்தை, அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பெண்களையும் கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அனுமதி இல்லை என்றால் தற்கொலை
தன்னை தனது காதலியுடன் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால், இவரும் தற்கொலை செய்துக்கொள்வோம் என இலங்கை பெண், விசாரணைகளின் போது,நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண்களை மனநல மருத்துவரிடம் அனுப்பி இன்றைய தினம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மனநல பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இலங்கையின் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளட்ட தரப்பினர் நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் பேரணி ஒன்றை நடத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.