உலக வங்கியிடமிருந்து கோட்டாபயவுக்கு வந்த உறுதிமொழி!
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் ஹடாட்-செர்வோ (Faris Hadad-Zervos) சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வந்ததன் பின்னர் உலக வங்கி மேலதிக ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான திட்டங்கள்
உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் 17 திட்டங்கள் நடந்து வருகின்றன. உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் ஹடாட்-செர்வோ (Faris Hadad-Zervos) தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள நிதி உதவிகளை வழங்குவதற்காக திட்டங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய அரச தலைவர், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உலக வங்கி கடன் உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
விவசாயம், கால்நடைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களில் ஈடுபடும் மக்களுக்கு குறைந்த வட்டியில் இத்தகைய நிதியுதவிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச தலைவர் உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
உள்நாட்டு எரிவாயு மற்றும் உர விநியோகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.