சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம்!
சீனாவின் (China) ஹூனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மதிப்பில் 7.3 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 1,000 மெட்ரிக் தொன் தங்கம் நிலத்தடி பகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம், இதுவரை உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமாக கருதப்பட்ட தென் ஆபிரிக்காவின் South Deep Gold Mine (சுமார் 900 மெட்ரிக் தொன்) சாதனையை சீனா முறியடித்துள்ளது.
300 மெட்ரிக் தொன் தங்கம்
இந்த தங்கச் சுரங்கம் முன்னேற்றமான 3D புவியியல் மாதிரி தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்ட நிலையில் இந்த நவீன முறைமையின் மூலம் 2 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ள தங்கத் தாது அடுக்குகளை மிகத் துல்லியமாக அடையாளம் காண முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் இதுவரை 2 கிலோமீற்றர் ஆழத்தில் 40 வகையான தங்கத் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்துள்ளதுடன் அதில் மட்டும் சுமார் 300 மெட்ரிக் தொன் தங்கம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 கிலோமீற்றர் ஆழம் வரை ஆய்வு மேற்கொண்டால் இன்னும் அதிக அளவில் தங்கத் தாதுக்கள் கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு சுரங்கத்தில் ஒரு தொன் கற்களில் 8 கிராம் தங்கம் கிடைத்தாலே மிகப் பெரிய விடயமாகக் கருதப்படும் நிலையில் பிங்ஜியாங் மாவட்டத்தின் எடுக்கப்பட்ட மாதிரி கற்களில் 138 கிராம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் இது அதிக அரிதான மற்றும் பொருளாதார ரீதியாக மிகப் பெரும் மதிப்பு வாய்ந்த கண்டுபிடிப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக தங்க சந்தை
இதுபோன்ற அளவில் தங்கத் தாதுக்கள் அடர்த்தியாகக் காணப்படும் நிலம் மிகச் சில நாடுகளில் மட்டுமே இருப்பதாகவும், சீனாவின் ஹூனான் மாகாணம் தற்போது உலக தங்க உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகப்போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் நாடாக உள்ளது. புதிய தங்கச் சுரங்கம் வணிக ரீதியாகச் செயற்படத் தொடங்கினால், சீனாவின் தங்க ஏற்றுமதி, நாணய மதிப்பு, மற்றும் உலகளாவிய பொருளாதார தாக்கம் மிகுந்து உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேலும், உலகளவில் தங்க விலை ஏற்கனவே ஏற்ற இறக்கங்களுடன் இயங்கிக் கொண்டிருப்பதுடன் சீனாவின் இந்த பெரும் கண்டுபிடிப்பு, உலக தங்க சந்தையில் விலை சரிவு ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சீன புவியியல் துறை அதிகாரிகள், இது ஆரம்ப கட்டம் எனவும் பிங்ஜியாங் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற தாதுக்கள் இருப்பதாக 3D ஆய்வுகள் காட்டுகின்றதாகவும் விரைவில் முழுமையான சுரங்கப் பணிகள் தொடங்கப்படும்“ என்று தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |