உலக எலும்பு நெய்யரி விழிப்புணர்வு தினம் : சித்தமருத்துவத்தின் இயற்கை வழிகாட்டல்
ஒக்டோபர் 20ஆம் திகதி உலகம் முழுவதும் உலக எலும்பு நெய்யரி ஆரோக்கிய தினம் (World Osteoporosis Day) எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் சங்கத்தின் எலும்பியல் பிரிவு எலும்பு நலனைக் குறித்த விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
எலும்புகளின் அடர்த்தி குறைந்து அவை எளிதில் முறியும் நிலையே “எலும்பு நெய்யரியாதல்” எனப்படும். இது பொதுவாக முதியவர்களில், மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின் பெண்களில், மேலும் சமீபகாலங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இளைய தலைமுறையினரிடமும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலும்பு தாதுவை வலுப்படுத்தும் பல இயற்கை மருந்துகள்
உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் D குறைபாடு, உடற்பயிற்சி பற்றாக்குறை, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.
சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவங்களில் எலும்பு தாதுவை வலுப்படுத்தும் பல இயற்கை மருந்துகள் உள்ளன. சித்தமருத்துவம் குறிப்பாக உடலின் தாதுக்களை சமநிலைப்படுத்தி, எலும்பு வலிமையை மீட்டெடுத்து, வலி மற்றும் விறைப்பை குறைத்து புத்துணர்ச்சியை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
சித்த மருந்துகளில் அமுக்கராசூரணம், சங்கு பஸ்பம், எலும்புப் பஸ்பம், முத்துசிப்பிப் பஸ்பம், வெண்காரம் பஸ்பம் போன்றவை எலும்பை பலப்படுத்தி, கால்சியம் அளவை உயர்த்த உதவுகின்றன. இம்மருந்துகள் தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிகிச்சை பெறும் இடங்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் — பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலைகள், கம்பகா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகள், கப்பல்துறை ஆதார வைத்தியசாலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி தள வைத்தியசாலைகள், மாதம்பே ஆதார மருத்துவமனை, மேலும் மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனைகள் — எலும்பு நெய்யரியாதல் நோய்க்கு சிறப்புச் சிகிச்சைகளை வழங்கி வருகின்றன.
மேலும், பிரதேச சபைகளின் கீழ் இயங்கும் இலவச சுதேச வைத்தியசாலைகள் வழியாக மக்களுக்கு தரமான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இச்சேவைகள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலும்பு ஆரோக்கியத்திற்காக தினசரி உணவில் எள்ளு, முருங்கைக்கீரை, பசும்பால், நல்லெண்ணெய் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளவும்; குளிர்ந்த உணவுகள், குளிர்பானங்கள், மது, அதிக காபி போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தொடர்ச்சியான உடற்பயிற்சி, ஒழுங்கையான உறக்கம், போதிய சூரிய ஒளி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை எலும்பு நலனைப் பாதுகாக்க முக்கியமானவை என அரச வேலை எதிர்பாக்கும் சித்த மருத்துவர்கள் சங்கத்தின் எலும்பியல் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
