இன்று உலக அகதிகள் தினம்..!
உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர்.
அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம்.
2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் இழந்தவர்கள் அகதிகளாகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்து வரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாகவே, ஆண்டுதோறும் ஜூன் 20ம் திகதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அகதிகள் தினத்தின் நோக்கம்
இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை அகதிகள் தினம் வலியுறுத்துகிறது.
2011ஆம் ஆண்டு கணக்கின் படி, உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என, யூ.என்.எச்.ஆர்.சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் பலர். இவ்வாறு அகதிகளாக உள்ளவர்களுக்கு, அந்தந்த நாடுகள் சிறப்பு திட்டங்கள் மூலம், மறுவாழ்வு அளிக்க வேண்டும். அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என யூ.என்.எச்.ஆர்.சி வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது 4.1 செகண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும்
உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக கடந்த 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகின்றது. இதில் 95% வீதமான ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 80 மில்லியன் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போர் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
