இலங்கையில் பயிரிடப்படவுள்ள புதிய அன்னாசி வகை: நவீனமயமாகும் விவசாயத் துறை
உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple (Ananas comosus) இலங்கையில் பயிரிடுவதற்கான அவசர பரிந்துரைகளை விவசாயத் திணைக்களம் வழங்க உள்ளது.
உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார், எனவே, இலங்கையில் பயிரிடப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில் அதிக தேவை உள்ளது.
இந்நிலையில், MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவுகின்ற போதிலும், இந்த அன்னாசி வகையை இந்த நாட்டில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விவசாயத் துறை நவீனமயமாக்கல்
அத்தோடு, இனிப்புச் சுவை மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட இந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட நடத்தப்பட்ட ஆராய்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, பயிர் வெளியீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், இலங்கையில் சாகுபடிக்கு இந்த MD 2 அன்னாசி வகையை பரிந்துரைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், விவசாயத் துறை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையில் இந்த MD 2 அன்னாசிப்பழத்தின் பயிர்ச்செய்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெற்றியடைந்துள்ளதுடன், விவசாயிகளும் இந்த அன்னாசி வகையை பயிரிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |