80 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு
இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த சுமார் 470 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடின் மையப்பகுதியில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் இருந்து குறித்த வெடிகுண்டு மீட்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வெடிகுண்டை நிபுணர்கள் இன்று பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். இந்த வெடிகுண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட AN-M44 வகையை சேர்ந்ததாக கூறப்படுகிறது.
நாஜிக்களின் ஆக்கிரமிப்பு
கடந்த 1944 -ஆம் ஆண்டு, நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்த பெல்கிரேடை விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி முகாம்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலின் போது இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 80 ஆண்டுகளாக வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்த குண்டு, தற்போது கட்டுமானப் பணியின் போது வெளிவந்துள்ளது.
குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு அருகில் இந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வாகனங்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்த வெடிகுண்டு, பெல்கிரேடில் இருந்து சுமார் 180 கி.மீ தொலைவில் உள்ள இராணுவப் பயிற்சி மைதானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வெடிக்காத குண்டுகள்
செர்பியாவில் கடந்த கால போர்களின் எச்சங்களாக வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்படுவது இது முதல்முறை அல்ல.
செப்டம்பர் 2024ல் பெல்கிரேடில் உள்ள நாடாளுமன்றம் அருகே 300 கிலோ எடையுள்ள 100 ஆண்டு பழமையான பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது.

ஏப்ரல் 2024ல் தெற்கு செர்பியாவின் நிஸ் (Nis) நகரில் 1999-ஆம் ஆண்டு நேட்டோ (NATO) படைகள் வீசிய பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டில் பெல்கிரேடின் புறநகர் பகுதியில் 242 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு ஒன்று அகற்றப்பட்டது.
இதுபோன்ற ஆபத்தான வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படும் போதெல்லாம், செர்பிய இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு எந்தவித அசம்பாவிதமும் இன்றி அவற்றைச் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |