உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தடுமாற்றம்!
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இறுதிப்போட்டி
அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களும், ஸ்மித் 121 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரோகித் சர்மா 15 ஓட்டங்களுடனும், கில் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 14 ஓட்டங்கள், புஜாரா 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இந்திய அணி பின்னிலையில்
4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜடேஜா 48 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களை குவித்தது.
ரஹானே(29 ஓட்டங்கள்) மற்றும் பரத் (5 ஓட்டங்கள்) களத்தில் உள்ள நிலையில, இந்திய அணி 318 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
