நூலிழையில் தப்பிய இலங்கை விமானப்படை விமானம்!
ரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்த Y-12 ரக விமானம் ஒன்று, பட்டம் விடும் நூல் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்புச் சிக்கலை அடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களை அவசரமாக வலியுறுத்தியுள்ளது.
ரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (ஜூலை 15) பயிற்சிப் பறப்பிற்காகப் புறப்பட்ட இந்த விமானம், வான்வெளியில் பட்டம் விடும் நூல்களால் உருவான அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
தொழில்நுட்ப ஆய்வு
எவ்வாறாயினும், விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்திற்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அங்கு விரிவான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆய்வின் போது விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பிற முக்கிய பாகங்களில் பெருமளவிலான பட்டம் விடும் நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கடுமையான அச்சுறுத்தல்
செயல்பாட்டிலுள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவது விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாகும் என்று எச்சரித்துள்ள விமானப்படை, பட்டம் விடும் நூல்கள் மற்றும் காற்றில் மிதக்கும் பிற பொருள்கள் விமான எஞ்சின்கள் மற்றும் அத்தியாவசியக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் விமானத்திற்குச் சேதம் விளைவிப்பதுடன், கட்டுப்பாட்டை இழக்கச் செய்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |