தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர்
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து சற்று தொலைவில் நேற்று(19) இரவு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், சிறிய ரக பேருந்து ஒன்று மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினரின் அடாவடி
இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்டதாக காணப்பட்ட போதும், இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும், படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகள்
அத்துடன், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தையும், அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இலுப்பைக்கடவை காவல்துறை பிரிவில் மணல் மண் கடத்தல்காரர்களிடம் பாரிய அளவில் லஞ்சம் பெற்று மணல் வியாபாரத்திற்கு அனுமதியை இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க வழங்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |