இலங்கை வந்த இந்திய சுற்றுலா பயணிக்கு ஏற்பட்ட நிலை
வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து பணத்தை திருடிய நபர் ஒருவர் இன்று (15) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட பணத்தில் சில வீட்டில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலாதாரியின் பணம் திருட்டு
மங்கேஷ் ஹர்ஷன் பட்டேல் என்ற 47 வயதான இந்தியர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி சுற்றுலாவிற்காக வந்து விடுதியில் தங்கியிருந்த போது அறையில் இருந்த சூட்கேஸில் இருந்த 259 அமெரிக்க டொலர்கள், 500 இந்திய ரூபா மற்றும் 17,000 இலங்கை ரூபா என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
