யுவான் வாங் 5ஆல் சீன இந்தியாவிற்கிடையில் வெடித்த பூகம்பம்! கொழும்பை பாராட்டிய சீனா - சீற்றமடைந்த இந்தியா
தாய்வான் பிரச்சினையை இலங்கையுடன் இணைத்தமை தொடர்பில், இலங்கைக்கான சீன தூதரை இந்தியாவின் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) பங்கஜ் சரண், கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாராட்டிய சீனா
இந்தியாவின் ஆட்சேபனையையும் மீறி, அதன் உளவுக் கப்பலான யுவான் வாங் 5-ஐ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்ததற்காக, கொழும்பை பாராட்டிய சீன தூதுவர், Qi Zhenhong, கப்பலை நிறுத்துவதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்தமையானது, இலங்கையின் தேசிய இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் விமர்சித்திருந்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பல்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவது என்பது இலங்கை அரசாங்கத்தின் இறையாண்மைக்குள் எடுக்கப்பட்ட முடிவாகும். அத்துடன் சில சக்திகளின் "பாதுகாப்பு கவலைகள்" என்றழைக்கப்படும் வெளிப்புற தடைகள் இலங்கையின் இறையாண்மையில் ஒரு முழுமையான தலையீடு ஆகும் என்றும் சீன தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
சீற்றமடைந்த இந்தியா
இந்த அறிக்கைக்கு பதில் வழங்கியிருந்த கொழும்பின் இந்திய உயர்ஸ்தானிகரகம், அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவது தூதுவரின் தனிப்பட்ட பண்பாகவும், சீனாவின் தேசிய மனோபாவத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம் என தெரிவித்திருந்தது.
அதேநேரம் சீனாவின் ஒளிபுகாநிலை உடன்படிக்கை மற்றும் கடனால் உந்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஆகியவை இப்போது இலங்கைக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக சீனாவின் கொள்கைகளே காரணம் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, இலங்கையின் மீது அனுதாபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு சீனாவுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவின், துணை தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் பங்கஜ் சரண் குறிப்பிட்டுள்ளார்.
சீனா இலங்கையை ஒரு பெரிய விளையாட்டில் பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறது. எனினும் இந்தியாவைப் பொறுத்த வரையில் அது, இலங்கையுடன் நீண்ட கால உறவைக் கொண்டுள்ளது. எதிர்காலத்திலும் அதைத் தொடரும். அண்டை நாடுகளை கையாள்வதில் இந்தியாவுக்கு வேறுபட்ட அணுகுமுறை உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.