புதிய கலப்பின சோளம் விதைகள்! விற்பனை செய்ய முடியாமல் திண்டாடும் தமிழ் விவசாயிகள்
வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கலப்பின சோளம் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கலப்பின சோளம் உற்பத்தியானது பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம், மணியர்குளம், எருக்கலம்கல், வேலங்குளம், பாவற்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் செய்கை செய்யபட்டது.
சோளச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கலப்பின சோளம் விதைகளை பதப்படுத்தி அதனை நெளுக்குளம் பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சோளம் விதை உற்பத்தி களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளனர்.
பெரும் நட்டம்
இந்நிலையில் குறித்த சோளம் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர், இதன் காரணமாக சோளம் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் பலரும் பெரும் நட்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், ஏற்கனவே சோளம் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் தவிர ஏனைய விவசாயிகளுக்கு சோளப் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
முளை திறன்
சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் முறையாக மேற்கொள்ளாமையால் குறித்த சோளம் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்தும் இந்த நிலை நீடித்தால் அதன் முளை திறன் குறைவடைந்து அவற்றை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |