10 பில்லியன் ரூபா செலவில் புதுப்பொலிவு பெறவுள்ள தபால் திணைக்களம்
"தபால் திணைக்களத்தின் சீர்திருத்தம் தொடர்பான செயற்பாடுகளை துரிதப்படுத்தும் பொருட்டு புதிய தபால் சட்டம் இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்" என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
நேற்று (17) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியாக 10 பில்லியன் ரூபா செலவில் புதுப்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்படவுள்ள மாற்றம்
இதன்போது தபால் திணைக்களம் எந்தகையிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அவர் உறுதியளித்திருந்தார்.
புதுப்பித்தலின் போது தபால் திணைக்களத்தினை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் அஞ்சல் துறையை இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல் தபால் திணைக்களத்தின் நட்டம் 4000 மில்லியன் ரூபாவால் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.