விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு : கைச்சாத்தானது ஒப்பந்தம்
100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நேற்று (07) சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாய விளைச்சல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலைபேறான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள கிராமப்புற சமூகங்களின் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவீன விவசாயத்தை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil wickremesinghe) வேலைத்திட்டத்தின் பிரகாரம், விவசாயத்திற்கான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போர்த்துக்கேய நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
காத்திருக்கும் அதிர்ஷ்டம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்- இன்றைய ராசி பலன்கள்
தொழில்நுட்ப உதவி
இதற்காக அநுராதபுரம் மாவட்டத்தில் 15,000 குடும்பங்களும் 15,000 ஏக்கரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த முன்னோடித் திட்டத்தில் இவற்றை இணைக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி ஒரு குடும்பத்திற்கு சுமார் 6000 அமெரிக்க டொலர்கள் செலவை முதலீட்டு நிறுவனம் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு விவசாயத்திற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படவுள்ளதாகவும் சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன (Ruwan Vijewardena) தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முதலீட்டு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், தற்போது மிளகாய், தக்காளி, தர்பூசணி பயிர்ச் செய்கையில் கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்காலத்தில், ஏனைய பயிர்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்றுமதிப் பொருளாதாரம்
இந்த முன்னோடித் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, ஏனைய மாவட்டங்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த நவீன விவசாயத்தின் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதே சமயம் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் செயலாளரான முன்னாள் மாலைதீவு அதிபர் மொஹமட் நஷிட் மற்றும் போர்த்துக்கலின் நாடிவ கப்பிட்டல் (Nativa Capital) நிறுவனம் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ் (Carloes Comas) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |