பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை காவல்துறையினர் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சுமார் 135 பேர் சிறையில் இருந்தபோதும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான தகவல் அந்தந்த காவல்துறை நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் புகைப்படக்கருவி
இதேவேளை, வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புகைப்படக்கருவி அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் தேடப்படும் குற்றவாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த முயற்சிகளின் மூலம் கைது செய்யப்பட்ட ஏராளமானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பாதுக்க, துன்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |