வெளிநாடுகளில் தலைமறைவான சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள்!
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தல்
குறித்த குற்றவாளிகளை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும் என்றும், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இக்குற்றவாளிகள் போதைப்பொருள் கடத்தல் மூலமே சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தச் சட்டவிரோதப் பணத்தில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் காவல்துறையின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணி நேரமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சொத்துக்களை முடக்க திட்டம்
இதேவேளை 2024 ஆம் ஆண்டு 1,490 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், 2025 ஆம் ஆண்டு 1,549 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், 2026 ஆம் ஆண்டு 1,656 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சொத்துக்களில் தங்க ஆபரணங்கள், காணிகள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் என்பன அடங்குகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |