இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 129 சீன பிரஜைகள்: சிஐடியில் தொடரும் விசாரணை
புதிய இணைப்பு
இணையத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 129 சீன பிரஜைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasooriya) பணிப்புரைக்கமைய குறித்த விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் மற்றும் கண்டி காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குண்டசாலை பகுதியில் வைத்து நேற்று குறித்த 129 சீன பிரஜைகளும் கைதாகியிருந்தனர்
முதலாம் இணைப்பு
பாரியளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டி (Kandy), குண்டசாலை பிரதேசத்திலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் இன்று (12.10.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 15 கணனிகளும், 300 இற்கு மேற்பட்ட கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இணையவழி நிதி மோசடி
இணையவழி நிதி மோசடி அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மாத்திரம் நிதி மோடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறாம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தின் இரு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 சீனர்கள், இந்தியர்கள் நால்வர் மற்றும் தாய்லாந்து (Thailand) பிரஜைகள் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடந்த ஏழாம் திகதி நாவல பிரதேசத்தில் 19 சீன பிரஜைகளும், கடந்த 10 ஆம் திகதி பாணந்துறையில் (Panadura) 20 சீன பிரஜைகளும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |