பேக்கரியை உடைத்து றோஸ் பாண் சாப்பிட்ட யானைகள்
ஒரு பேக்கரியின் சுவர்களை உடைத்த யானைகள் அங்கிருந்த பாண் மற்றும் ரோஸ் பாண் ஆகியவற்றை தின்றுவிட்டதாக பேக்கரிஉரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், சிராவஸ்திபுர பிரதேசத்தில் இயங்கி வரும் பேக்கரிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு தற்செயலான சம்பவம் மட்டுமல்ல, வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானைகளால் சிராவஸ்திபுர கிராம மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தலின் மற்றொரு சந்தர்ப்பமாகும்.
காட்டு யானைகளால் தொடர் தொல்லை
இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானைகள் தங்கள் பயிர்களை அழித்து வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதாக சிராவஸ்திபுர பிரதேச கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 25ஆம் திகதி அதிகாலை வேளையிலும் மூன்று காட்டு யானைகள் அப்பகுதிக்குள் நுழைந்து தங்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதல்களுக்கு ஆளான சிராவஸ்திபுர, சிராவஸ்திவத்தையைச் சேர்ந்த 38 வயது பேக்கரி உரிமையாளர் டி.ஜி. சம்பத் குமாரவின் கூற்றுப்படி, அவரது பேக்கரி காட்டு யானைகளின் இலக்காக மாறியது இது முதல் தடவையல்ல.
மூன்று முறை பேக்கரியை சேதப்படுத்திய யானைகள்
“கடந்த மாதம் 01ஆம் திகதி யானைகள் வந்து பேக்கரியின் சுவர்களை உடைத்து, அங்கிருந்த பாண், ரோஸ் பாண் ஆகியவற்றை தின்று அழித்தன. மீண்டும் 07ஆம் திகதியும் காட்டு யானைகள் வந்து சுவர்களை உடைத்து ரோஸ் பாணை தின்றுவிட்டுச் சென்றன. நேற்றும் (25) அதிகாலை ஐந்து மணியளவில் மூன்று யானைகள் வந்து பேக்கரியின் சுவர்களை உடைத்து அழித்துவிட்டுச் சென்றன,” என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக ஏற்படும் இந்த சேதங்கள் காரணமாக கிராம மக்களுக்கு போதிய பாதுகாப்பு அல்லது அதிகாரிகளின் தலையீடு கிடைப்பதில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
வனவிலங்கு திணைக்களத்திடம் அறிவித்தும் பலனில்லை
காட்டு யானைகளை விரட்ட வனவிலங்கு திணைக்களத்திடம் இருந்து யானை வெடிகள் கிடைப்பதில்லை என்றும், யானைகள் கிராமத்திற்குள் நுழையும் போது வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்தாலும் அவர்கள் வருவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், வருவதற்கு வாகனம் இல்லை அல்லது யாரும் இல்லை என்று அதிகாரிகள் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கடந்த 25ஆம் திகதி காட்டு யானைகள் வந்து பேக்கரியின் சுவர்களை உடைத்தபோது, அது குறித்து வனவிலங்கு திணைக்களத்தின் கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திலும் புகார் அளித்ததாக சம்பத் குமார தெரிவித்தார்.
அப்போது அனுராதபுரம் குழுவை அனுப்புவதாகக் கூறப்பட்டாலும், அதுவரை யாரும் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வாரத்திற்கு பல நாட்கள் கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானைகளால் ஏற்படும் இந்த சொத்து சேதங்கள் குறித்து பொறுப்பான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கிராமத்திற்கு யானைகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்று சம்பத் குமார கோரிக்கை விடுத்துள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |