மன்னாரில் சுகாதார விதிகளை மீறிய 5 உணவகங்கள் கண்டுபிடிப்பு
(நயன்)
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வுக் கூட்டங்களும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், மன்னாரில் சில உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த வகையில், மன்னார் நகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் ஐந்து உணவு விற்பனை நிலையங்கள், மன்னார் நகர சபையின் பொது சுகாதாரப் பரிசோதகரால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறைபாடுகள்
குறிப்பாக, சில உணவு விற்பனை நிலையங்கள் உரிய வர்த்தக அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியமை, உணவைக் கையாளும் பணியாளர்களிடம் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் உணவு தயாரிக்கும் இடங்கள் போதிய சுத்தமின்றிக் காணப்பட்டமை போன்ற குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டமை, ஈக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளினால் உணவுகள் மாசுபடக்கூடிய சூழல் காணப்பட்டமை, சமைக்கப்படாத உணவுகளையும் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் முறையாகத் தனித்தனியாகச் சேமிக்காமை போன்ற குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சமையல் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் உரிய சுகாதார முறையில் பராமரிக்கப்படாமை, கழிவுகள் மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றாமையினால் சுற்றுச்சூழல் மாசுபடக்கூடிய நிலை காணப்பட்டமை, உணவுப் பாதுகாப்பு தொடர்பான பதிவுகள் மற்றும் சட்டரீதியான நடைமுறைகள் முறையாகப் பேணப்படாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளன.
பலமுறை விழிப்புணர்வுக் கூட்டங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், உணவு விற்பனை நிலையங்களில் இவ்வாறான சுகாதாரக் குறைபாடுகள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |