தனது பணிநேர துப்பாக்கியை குற்றக்கும்பலுக்கு விற்றுவிட்டு துபாய்க்கு தப்பிச் சென்ற காவலர் சிக்கினார்
துபாயிலிருந்து இன்று (26) அழைத்து வரப்பட்ட காவலர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன்னதாக, தனது பணி ஆயுதத்தையும் அதற்கான 30 தோட்டாக்களையும் ஒரு குற்றக் கும்பலுக்கு விற்றதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, கடந்தபெப்ரவரி 8, 2025 அன்று இந்தச் சம்பவம் நடந்தபோது, சந்தேகநபர் கல்கிசை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார்.
'சிவப்பு அறிவித்தல்'
அவர் தனது அதிகாரபூர்வ பணிக்காக வழங்கப்பட்ட 'ரி-56' (T-56) ரக துப்பாக்கியையும் தோட்டாக்களையும் விற்றுவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை அழைத்து வரப்பட்ட காவலர்
ஹலம்பகாஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான இந்தச் சந்தேகநபர், இன்று அதிகாலை துபாயிலிருந்து இலங்கை அழைத்து வரப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் குழுவினர் கைது செய்தனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |