வட மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையைத் திருத்துதல் மற்றும் தேசிய, மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது குறித்து நாடாளுமன்றக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன், வட மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்குப் பதிலாக, 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கையொன்றைத் தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழு பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் (20) நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பல்கலைக்கழக மாணவர்கள்
இதன்போது, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆசிரியர் இடமாற்றங்கள், பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தல், முன்பள்ளிக் கல்வி, பாடசாலை மதிய உணவுத் திட்டம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதற்கமைய ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும்போது எதிர்கொள்ளப்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, ஆசிரியர் இடமாற்றச் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள 30 கிலோ மீற்றர் தூர வரையறையானது, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள தொலைதூரப் பாடசாலைகள் தொடர்பில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால், அந்த வரையறையை மீளாய்வு செய்யுமாறு இடமாற்றச் சபைக்கு அறிவிக்கக் குழு தீர்மானித்தது.
ஆசிரியர் தரவுக் கட்டமைப்பு
அத்துடன், சில தேசியப் பாடசாலைகளில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வேறு தேசியப் பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் இடமாற்றம் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, இடமாற்றங்களுக்காக மாத்திரம் தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் சேவைக் காலம் தொடர்பான தகவல்களைச் சில பாடசாலைகள் சரியாகச் சமர்ப்பிக்காமை மற்றும் ஆசிரியர் தரவுக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, உரிய தகவல்களை மறைப்பதாகச் சந்தேகிக்கப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதிப்பதுடன், ஆசிரியர் தரவுக் கட்டமைப்பிலுள்ள தகவல்களைப் புதுப்பித்து, சேவைக் காலத்தைச் சரியாகக் கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |