மூன்று நாட்களில் 120 மில்லியன்! தீபாவளியில் அதிக வருமானத்தை பெற்ற ஹட்டன் டிப்போ
இந்த வருட தீபாவளி பண்டிகை காலத்தில், ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பணிமனை நூற்று இருபது மில்லியன் ரூபாய் (12,000,000) வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் குறித்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பணிமனை அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.கீர்த்திரத்ன,
80 க்கும் மேற்பட்ட பேருந்துகள்
“கடந்த மூன்று நாட்களில், அதாவது 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில், பணிமனைக்கு சொந்தமான சுமார் 90 பேருந்துகள் நீண்ட மற்றும் குறுகிய தூர நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
பணிமனையின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் தாராளமான அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தின் காரணமாக இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது.
எங்கள் பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களில் பெரும்பாலோர் இந்து பக்தர்கள்.
அவர்கள் தங்கள் முக்கிய மத விழாவிற்கு விடுமுறையில் இருந்தபோது, கடமைக்கு வந்த மற்ற ஊழியர்களின் ஆதரவுடன், 80 க்கும் மேற்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடிந்தது.
இது ஒரு பெரிய சாதனை. தீபாவளி பண்டிகைக்காக கிராமங்களுக்கு வந்த வெளிமாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க சிறப்பு பேருந்து சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
