13A தீர்வல்ல – புலம்பெயர் சமூகம் ஏற்க மறுப்பதாக அறிவிப்பு ( படங்கள்)
இங்கிலாந்தில் இருக்கும் இலங்கை தூதரகம் முன்பு பெப்ரவரி 4ஆம் திகதி நேற்று ஒரு எழுச்சிப் போரட்டத்தை புலம்பெயர் அமைப்புக்கள் நடத்தி இருந்தன.
இலங்கையின் சுதந்திரதின நாளில் இந்த சுதந்திரம் எமக்கானதல்ல என்ற சுலோகனுடன் அவர்கள் இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்த போராட்டாத்தின் போது புலம்பெயர் சமூகம் 13A திருத்த சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் இருக்கும் ஏழு கட்சிகள் 13A வை நடைமுறைப்படுத்தும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். இந்த நிலைப்பாட்டுக்கு இலங்கையிலும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் ஆதரவு இருப்பாதாகச் சொல்லப்படுவதை இந்தப் போரட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் மறுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்கள் அபிலாசை பற்றிய நிலவரத்தை தாம் முழுமையாக வெளிக்கொண்டுவர இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் எத்தககைய கோரிக்கைக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நிறுவிக் காட்ட தொடர்ந்து வேலை செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
புலம்பெயர் மக்கள் ஆதரவு இருக்கு என்று பொய் சொல்லி எங்களது பெயரில் தமிழ் மக்களின் உரிமைகளை விற்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு 13A திருத்தச் சட்டம் அரசியல் தீர்வல்ல என்ற சுலோகன் இந்த போராட்டத்தின்போது முதன்மையாக முன்வைக்கப்பட்டது. இந்த போரட்டத்தை ஒழுங்கு செய்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்புக்கள் இணைந்து வைத்த கோரிக்கைகள் வருமாறு,
ஒற்றை ஆட்சியை நிராகரிபோம்
13A தீர்வல்ல – நாம் கோருவது பிரிந்து போகும் உரிமை உட்பட்ட சுய நிர்ணைய உரிமை.
நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்து.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்.
போராட்ட செயற்பாட்டாளர்கள் மேல் வன்முறை செய்வதை உடனடியாக நிறுத்து.
இலங்கை அரசு ஒழுங்கு செய்யும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் பங்கு பற்றுவோர் இலங்கையில் இருக்கும் அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்கும் விரோதிகளே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை அரசோடு கூடிக் கொண்டாட்டம் செய்துவரும் அதேவேளை – மறுபுறம் மக்களுக்கு அரச எதிர்ப்பும் மக்கள் பக்கமும் என்ற பாவனை செய்து வருகிறார்கள் சிலர்.
இந்த மக்கள் விரோத சக்திகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவர்கள் எனவும் அரச ஆதரவு சக்திகள் புலத்தில் பலப்படுவதை அனுமதிக்க கூடாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.



