தமிழர் தாயகத்தில் போதைப் பொருளுடன் காவல்துறையிடம் சிக்கிய மூவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா (Vavuniya) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த 28 ஆம் திகதியன்று வவுனியா காவல் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காவல் பரிசோதகர் எச்எம்.ரிஸ்வி (H.M.Rizvi) தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வைத்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் செட்டிகுளத்தில் (Chettikkulam) வசிக்கும் 35 வயதுடைய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின் குறித்த இளைஞர் காவல்துறையினரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக உக்குளாங்குளம், மில் வீதி பகுதியில் வைத்து செட்டிகுளத்தில் (Chettikkulam) வசிக்கும் 36 வயதுடைய இளைஞர் ஒருவரும் 12 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் இருவருக்கும் ஐஸ் போதைப் பொருளை விநியோகித்ததாக கூறப்படும் சந்தேக நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகரப் பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார், இதன்போது அவருடைய வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த மூவரையும் வவுனியா காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |