நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு
புதிய இணைப்பு
கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் லிந்துலை பாடசாலையில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனைத் தேடும் பணி
காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறை கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |