13 ஆண்டுகளில் இரும்பு அசுரனால் கொல்லப்பட்ட 149 யானைகள்
கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் தொடருந்து பாதைகளில் மோதி 149 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் தொடருந்து பாதைகளில் காட்டு யானைகள் கடக்கும் இடங்களில் நிகழ்ந்துள்ளன.
2023 இல் அதிகளவு யானைகள் உயிரிழப்பு
தொடருந்து விபத்துகளால் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் இறந்த ஆண்டு 2023 ஆகும், அதில் 24 யானைகள் உயிரிழந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள், 3 ஆக பதிவாகியுள்ளன.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2012 ஆம் ஆண்டில் 9 காட்டு யானைகளும், 2013 இல் 7, 2014 இல் 10, 2015 இல் 12, 2016 இல் 12, 2017 இல் 7, 2018 இல் 16, 2019 இல் 18, 2020 இல் 3, 2021 இல் 6, 2022 இல் 14, 2023 இல் 24 மற்றும் 2024 இல் 11 யானைகள் தொடருந்துகளுடன் மோதி இறந்துள்ளன.
கோவிட் தொற்றால் குறைவடைந்த யானைகளின் உயிரிழப்பு
உலகளாவிய கோவிட்(COVID) தொற்றுநோய் காரணமாக நாடு சிறிது காலத்திற்கு மூடப்பட்டதால் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு தொடருந்து நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டதால், 2020 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி, மின்னேரியாவிற்கும் கல்லோயாவிற்கும் இடையில் மட்டக்களப்பு-கொழும்பு தொடருந்து பாதையில் யானைக் கூட்டம் ஒன்று தொடருந்தில் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழக்க நேரிட்டது.இந்த சம்பவத்துடன், கவுடுல்ல வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்தப் பிரிவில் தொடருந்துகளில் மோதி 10 யானைகள் உயிரிழந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்