வடக்கு இ.போ.சபைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு! 15 கோடிக்கு ரூபாவிற்கு என்ன நிலை? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தில் உள்ள 7 சாலைகளும் சொந்தமான நிலையான வைப்பில் உள்ள 15 கோடி ரூபாய் நிதியை எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை மக்கள் வங்கியின் தலைமை காரியாலய கணக்கில் வைப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண இ.போ.சபையின் அதிகாரிகளும் ஊழியர்களும் தன்னிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியை பத்து மாத தவணையில் மீள செலுத்துவதாக இ.போ.ச தலைமையகம் தெரிவித்துள்ளதுடன் பணம் மீள செலுத்துவதனை ஆரம்பிக்கும் மாதங்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை குறிப்பிடப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
வைப்பு கணக்கில் 15 கோடி ரூபா வைப்பில் உள்ளதுடன், அந்த கணக்கிலுள்ள பணத்தை வடக்கு மாகாண வீதிகளுக்காக மாத்திரமே பயன்படுத்த முடியும்.
நாளாந்த பேருந்து சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டே வடக்கில் சேவையிலுள்ள பேருந்துகளுக்கான டீசல் மற்றும் உதிரி பாகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
மேலும் அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாண இ.போ.ச ஊழியர்களுக்கு மாதாந்தம் 15, 200 ரூபா என்ற சிறியளவிலான தொகையே வழங்கப்படுகின்றது.
வடக்கு மாகாண வீதிகளுக்கான நிலையான வைப்பு கணக்கிலுள்ள பணத்தை போக்குவரத்து சபையின் தலைமையகம் பெற்றுக்கொண்டால் வடக்கு போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அனைத்து மாதங்களுக்குமான சம்பளம் பெறுவது கனவாக மாறிவிடும்.
கணக்காளர்களினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் தொடர்பாக வீதி முகாமையாளர்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.
வடக்கின் ஏழு வீதிகளின் நிலையான வைப்பு கணக்கின் ஊடாக முன்னெடுக்கவுள்ள மோசடி திட்டம் தொடர்பாக கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதுடன் அது தொடர்பாக விசேட அவதானம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.