நீர்கொழும்பு சிறைக்கலவரம்...1200 கைதிகளிடம் CID வாக்குமூலம் : அமைச்சர் அறிவிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது. கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்
போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதியமைச்சர் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளார். சிறைச்சாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அந்த துறையுடன் தொடர்புடைய பிரிவுகளில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும். போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.
போதைப்பொருளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட் பலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்களை நோயாளிகளாக கருதி அவர்களுக்கு நிவாரணமளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்பல்ல
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. தோற்றம் பெறும் சகல பிரச்சினைகளையும் எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுத்துள்ளது. இதுவரையில் 1,200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |