தனியார் துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து குறித்து அரசாங்கத்திற்கான சிறப்பு நடவடிக்கை
தனியார் துறை ஊழியர்களுக்கு தொடருந்து சேவைகளுக்கான மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதி எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது.
இதற்காக seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தினசரி பயணங்களுக்கு தொடருந்து சேவையை பயன்படுத்தும் தனியார் துறை ஊழியர்களும், இணையவழி தொடருந்து முன்பதிவு தளத்தின் ஊடாக மாதாந்த பருவச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இருக்கை முன்பதிவு வசதி
இதுவரை அரச துறை ஊழியர்களுக்கு மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதி காணப்பட்ட நிலையில், அந்த வசதி தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் இன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
முன்னைய முறையின் கீழ், மாதாந்த பருவச்சீட்டைப் பெற விரும்பிய பயணிகள் விண்ணப்பப் படிவம், புகைப்படம், வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தொடருந்து அடையாள அட்டையைப் பெற வேண்டியிருந்தது.
அத்துடன், இந்த சேவை குறிப்பிட்ட நேரங்களிலும் ஒவ்வொரு மாதமும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியிலும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
புதிய முறையின் கீழ், பயணிகள் தங்களது அடையாளத்தையும் பயனர் கணக்கையும் உறுதிப்படுத்திய பின்னர், வீட்டிலிருந்தே இணையவழியில் மாதாந்த பருவச்சீட்டு பெறுவதற்கான முழு செயல்முறையையும் நிறைவு செய்ய முடியும்.
இருக்கை முன்பதிவு வசதி கொண்ட தொடருந்து நிலையங்களில் பயனர் கணக்கு சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
தொடருந்து சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தொடருந்து வே திணைக்களம் மற்றும் SLT-Mobitel ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening