யாழில் பரபரப்பு: காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் - அரச தரப்பின் நிலைப்பாடு
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, காவல்துறையினர் வாகனத்தை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக வானத்தை நோக்கிப் பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப் பட்டுள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கை
அந்த எச்சரிக்கையையும் மீறி வாகனம் பயணித்ததாலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை காவல்துறையினரும் யாழ். மாவட் டக் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
இந்தச் சம்பவத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |